'லவ் டுடே' வெளியாகி 4 ஆண்டுகள்: ஏஜிஎஸ் நிறுவனம் பகிர்ந்த சுவாரசிய வீடியோ!
இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'லவ் டுடே' திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் உற்சாகமாக கொண்டாடியுள்ளது. இன்றைய தலைமுறை காதல் மற்றும் ஸ்மார்ட்போன் கலாச்சாரத்தை நகைச்சுவையுடன் திரையில் காட்டிய இப்படத்தை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில், அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பு மேற்பார்வையில் உருவான இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் துள்ளலான பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூல் சாதனை படைத்த 'லவ் டுடே', பிரதீப் ரங்கநாதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர வரிசைக்கு உயர்த்தியது. தற்போது நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்கள் இப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நினைவுகூர்ந்து வருகின்றனர்.
· AGS Entertainment