5 ஆண்டுகளை நிறைவு செய்த 'டாக்டர்': நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் காம்போவின் வெற்றியை கொண்டாடிய படக்குழு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டாக்டர்' திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்புப் பதிவை வெளியிட்டு நெகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்த இந்தப் படம், தங்கள் தயாரிப்புப் பயணத்தில் எப்போதும் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் என படக்குழுவினர் நினைவு கூர்ந்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில் வித்தியாசமான டார்க் காமெடி, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் அனிருத்தின் துள்ளலான இசை ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு, அர்ச்சனா மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரின் கலகலப்பான நடிப்பு திரையரங்குகளில் சிரிப்பலைகளை உருவாக்கியது. கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு தியேட்டர்களுக்கு குடும்ப ரசிகர்களை மீண்டும் வரவழைத்த முக்கிய படமாகவும் இது அமைந்தது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வீடியோ பதிவு, தற்போது இணையத்தில் ரசிகர்களால் உற்சாகத்துடன் பகிரப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் கூட்டணியின் இந்த மறக்க முடியாத படைப்பு, தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இன்றும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
· Propratheesh