திரைத்துறையில் 43 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஹ்மான்: மலையாள அறிமுகம் முதல் பான் இந்தியா வரை!
தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் நடிகர் ரஹ்மான், சினிமா உலகிற்கு வந்து இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் சினிமா ஆய்வாளர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் நினைவுக் குறிப்பைப் பகிர்ந்துள்ளார். கடந்த 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று வெளியான ‘கூடெவ்விடெ’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் ரஹ்மான் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். இயக்குநர் எம்.பத்மராஜன் எழுதி இயக்கிய அந்தப் படத்தில் மம்மூட்டி மற்றும் சுஹாசினி ஆகியோருடன் இணைந்து இளம் நடிகராக ரஹ்மான் அறிமுகமானார். ‘வசந்தி’ என்ற தமிழ் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட அப்படத்திற்கு ஜான்சன் இசையமைத்திருந்தார். தொடக்க காலத்திலேயே வசீகரமான தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலும் தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்த ரஹ்மான், தமிழில் ‘நிலவே மலரே’, ‘புதுப்புது அர்த்தங்கள்’ போன்ற பல கிளாசிக் வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். சமீபத்தில் டைகர் ஷெராஃப், அமிதாப் பச்சன் நடித்த ‘கண்பத்’ இந்திப் படம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பான் இந்தியா நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது உடலமைப்பையும் நடிப்புத் திறனையும் மெருகேற்றி வரும் ரஹ்மானுக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
· Actor Kayal Devaraj