ஹாரர் படத்தில் பயமுறுத்தும் தாலாட்டு: பெங்களூரு பிரஸ் மீட்டில் பாடி அசத்திய சைத்ரா ஆச்சார்!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியீட்டில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் '418' திரைப்படத்தின் பெங்களூரு பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகை சைத்ரா ஆச்சார் படத்தில் இடம்பெறும் தாலாட்டுப் பாடலை நேரில் பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். இனிமையும் சோகமும் மர்மமும் கலந்த இந்த தாலாட்டுப் பாடல் நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைக்கலாஜிக்கல் ஹாரர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் 'தேவிகா' என்ற அமானுஷ்ய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மிரட்டலான காட்சிகள் பின்னப்பட்டுள்ளன. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைத்ரா ஆச்சார், தனது தனித்துவமான குரலால் அந்த தாலாட்டை நேரடியாகப் பாடிய விதம் அங்கிருந்த பத்திரிகையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள '418' திரைப்படம், வழக்கமான பேய் படங்களின் பாணியிலிருந்து விலகி பார்வையாளர்களின் மனதை உறைய வைக்கும் ஒரு த்ரில்லர் அனுபவத்தை திரையரங்குகளில் வழங்கி வருகிறது. திகில் பட ரசிகர்களுக்கு இந்த வார இறுதியில் இப்படம் ஒரு வித்தியாசமான விருந்தாக அமைந்துள்ளது.
· Idiamondbabu