கதாநாயகனாக களமிறங்கும் தேவி ஸ்ரீ பிரசாத்: 'எல்லம்மா' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் 'எல்லம்மா' திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல செய்தித் தொடர்பாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, இப்படம் வரும் 2027 மார்ச் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெற்றிப் படமான 'பலகம்' மூலம் அனைவரது பாராட்டையும் பெற்ற இயக்குநர் வேணு யெல்தண்டி இப்படத்தை இயக்குகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் 'பார்ஷி' என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உணர்ச்சிகரமான குடும்பப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் மூலம், ஒரு நடிகராகத் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புதிய முகத்தை ரசிகர்கள் திரையில் பார்க்க முடியும் என படக்குழு தெரிவித்துள்ளது. இசைத்துறையில் எண்ணற்ற ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்களைத் துள்ளாட்டம் போட வைத்த டிஎஸ்பி, தற்போது கதையின் நாயகனாகக் களம் காண்பது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 2027 மார்ச் 5 ரிலீஸ் தேதியை முன்னிட்டு அடுத்தடுத்து வரவுள்ள டீசர் மற்றும் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar