சூரி நடிக்கும் 'மண்டாடி': கதை உருவான பின்னணியை மனம் திறந்த இயக்குனர் மதிமாறன்!
'செல்ஃபி' பட இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படம் 'மண்டாடி'. இப்படத்தின் கதைக்களம் மற்றும் உருவான விதம் குறித்து இயக்குனர் மதிமாறன் பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி சினிமா ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கதை குறித்துப் பேசிய இயக்குனர் மதிமாறன், "இப்படத்திற்கு தொடக்கத்திலிருந்தே என் முதல் சாய்ஸ் சூரி சார்தான். 'செல்ஃபி' படத்திற்குப் பிறகு கடல் உலகத்தை மையமாகக் கொண்ட ஒரு கதையை இயக்குனர் வெற்றிமாறன் சாரிடம் கூறினேன். கதையை மேலும் விரிவாக ஆராய்ந்து எழுத வெற்றிமாறன் சார் எனது வங்கிக் கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஊக்கமளித்தார். பின்னர் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் படத்திற்கான கதையைக் கேட்டபோது, படகுப் போட்டியை மையமாகக் கொண்ட இந்த சவாலான கதையைத் தேர்வு செய்தார். எழுத்துப் பணி தொடங்கியபோதே சூரி சார் இதில் இணைந்தார்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் 'மண்டாடி' திரைப்படம், கடல் சார்ந்த வாழ்வியலையும் விறுவிறுப்பான படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவாகி வருவதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
· @_movietamil