கில்லி ரீ-ரிலீஸ்: ஆங்கில சப்-டைட்டில்களுடன் சர்வதேச அரங்கில் களமிறக்கியது க்யூப் சினிமா!
தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கிய மெகா வெற்றித் திரைப்படமான 'கில்லி' ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களும் கண்டுகளிக்கும் வகையில் சர்வதேசத் தரத்தில் ஆங்கில சப்-டைட்டில்களை இணைத்து படத்தை திரையரங்குகளுக்கு அனுப்பியுள்ளதாக க்யூப் சினிமா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இருபது ஆண்டுகள் கடந்த பிறகும் திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் கொஞ்சமும் குறையவில்லை. விஜய்யின் அதிரடி ஆக்ஷன், வித்யாசாகரின் துள்ளலான பாடல்கள், பிரகாஷ் ராஜின் 'செல்லம்' மேனரிசம் என அனைத்து காட்சிகளுக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று நடனமாடி வருகின்றனர். வெளிநாட்டு ரசிகர்களும் பிற மொழி சினிமா ஆர்வலர்களும் இந்த கொண்டாட்டத்தை முழுமையாக ரசிக்கும் விதமாக சப்-டைட்டில் பணிகளை மேற்கொண்டது பழைய நினைவுகளை மீட்டெடுத்த மகிழ்ச்சியைத் தந்ததாக க்யூப் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டைத் தாண்டி கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் கில்லி ரீ-ரிலீஸ் வசூல் சாதனை படைத்து வரும் சூழலில், வார இறுதி நாட்களில் கூடுதல் திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
· Qubecinema