எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த இளையராஜா, சரத்குமார்: நேரில் சந்தித்து வாழ்த்திய சேரன்!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் (SWAN) சார்பில் இசைஞானி இளையராஜா மற்றும் நடிகர் சரத்குமார் ஆகிய இருவரும் சங்கத்தின் கௌரவ உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். சங்கத்தின் தலைவர் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் அவர்களை நேரில் சந்தித்து உறுப்பினர் படிவங்களை வழங்கினர். பல நூறு திரைப்படங்களுக்கு காலத்தால் அழியாத பாடல்களை எழுதிய இசைஞானி இளையராஜாவும், மூன்று திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ள நடிகர் சரத்குமாரும் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ஆர்வத்துடன் படிவங்களில் கையெழுத்திட்டனர். எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் இருவருக்கும் நினைவுப் பரிசாக பேனா அன்புடன் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவுக்குக் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் வழியே அளப்பரிய பங்களிப்பு செய்து வரும் மூத்த ஆளுமைகளைச் சங்கத்தில் இணைக்கும் இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும் என்று இயக்குநர் சேரன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
· Nikil Murukan