தேவர் பெருமான், எம்.ஜி.ஆர்: அடுத்தடுத்த வரலாற்று நாயகர்களின் வேடங்களில் களமிறங்கும் ஜெ.எம்.பஷீர்!
தமிழ் சினிமாவில் வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சிகள் எப்போதுமே ரசிகர்களிடையே தனி ஈர்ப்பைப் பெறும். இந்நிலையில், பிரபல நடிகர் ஜெ.எம்.பஷீர் அடுத்தடுத்து இரண்டு வரலாற்று நாயகர்களின் வேடங்களில் நடிக்க உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, 2025-ஆம் ஆண்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும், அதைத் தொடர்ந்து 2026-ஆம் ஆண்டில் மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்திலும் ஜெ.எம்.பஷீர் நடிக்கவுள்ளார். கம்பீரமான தோற்றமும் அழுத்தமான நடிப்புத் திறனும் கொண்ட இத்தகைய வரலாற்றுத் தலைவர்களின் பாத்திரங்களில் நடிப்பது மிகப்பெரிய சவாலாகும். முந்தைய படங்களிலேயே தனது தனித்துவமான நடிப்பை நிரூபித்த இவர், இந்த பாத்திரங்களுக்காக தீவிர பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த வரலாற்றுப் படங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகள் மற்றும் இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. திரையுலகிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த அறிவிப்பு தற்போதே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
· Nikil Murukan