லெஜண்ட் சரவணனின் அடுத்த படப் படப்பிடிப்பு நிறைவு: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நாயகன்
தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான லெஜண்ட் சரவணன், தற்போது இயக்குநர் டிஎஸ்கே இயக்கத்தில் தனது அடுத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்த நாளில், படப்பிடிப்புத் தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை லெஜண்ட் சரவணன் நேரடியாக வழங்கி சிறப்பித்துள்ளார். இந்த மனிதநேயமிக்க செயல் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. முதல் படத்தைப் போலவே இப்படமும் பிரம்மாண்டமான பொருட்செலவில் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ளது. இப்படத்தின் அடுத்தகட்டமாக இசை வெளியீட்டு விழா மிக விரைவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Nikil Murukan