மெர்சல் பட நிதி விவகாரம்: சன் டிவி மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்! நடிகை ஸ்ரீபிரியாவுக்கு சட்ட வெற்றி
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'மெர்சல்' திரைப்படத்திற்கு நிதி வழங்கிய விவகாரத்தில், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதியின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு வழங்கப்பட்ட கடனுக்காக, தயாரிப்பாளர் என். ராமசாமி தனது வீடு மற்றும் அலுவலக ஆவணங்களைப் பிணையமாக அளித்திருந்தார். கடன் பாக்கிக்காக வழங்கப்பட்ட காசோலைகள் பவுன்ஸ் ஆனதை அடுத்து, நீதிமன்றம் மூலம் அச்சொத்துகளுக்கு இணைப்பாணை பெறப்பட்டது. இருப்பினும், அந்நடவடிக்கையை மீறி அச்சொத்துகள் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட நிலையில், இணைப்பாணையை நீக்கக் கோரி சன் டிவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, சன் டிவியின் வாதத்தை ஏற்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார். இதன்மூலம் மெரினா ஹோல்டிங்ஸ் பெற்ற முந்தைய நீதிமன்ற இணைப்பாணை தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
· Nikil Murukan