புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது: எம்.ஜி.ஆராக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்!
மக்களின் நெஞ்சங்களில் நீங்காது வாழும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகவுள்ளதாக பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 'தேசிய தலைவர்' திரைப்படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்து கவனம் ஈர்த்த ஜெ.எம்.பஷீர், இப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆரின் நாடக மேடைப் பயணம், சினிமா வாழ்க்கை, மக்கள் தொண்டு மற்றும் முதலமைச்சராக அவர் ஆற்றிய வரலாற்று சாதனைகள் அனைத்தும் உண்மைக் கதையின் பின்னணியில் படமாக்கப்பட உள்ளன. அ.தி.மு.க. தொடங்கப்பட்ட நாளான வரும் அக்டோபர் 17ஆம் தேதி, எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தில் முக்கிய பிரபலங்கள் முன்னிலையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தின் இயக்குநர் மற்றும் பிற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
· Nikil Murukan