மெய்யழகன் இயக்குநரின் அடுத்த படத்தில் நானி: ருக்மிணி வசந்த் இணையும் புதிய கூட்டணி!
இயக்குநர் சி பிரேம் குமாரின் இயக்கத்தில் நடிகர் நானி மற்றும் நடிகை ருக்மிணி வசந்த் இணைந்து நடிக்க உள்ளதாக கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 96 மற்றும் மெய்யழகன் படங்களை இயக்கி ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த பிரேம் குமாரின் புதிய கதை நானிக்கு மிகவும் பிடித்துவிட்டதாக சினிமா எக்ஸ்பிரஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மெய்யழகன் திரைப்படம் வெளியான போதே, படத்தை வெகுவாகப் பாராட்டி நானி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். உணர்வுப்பூர்வமான கதைகளை இயல்பு மாறாமல் திரையில் கொண்டு வரும் பிரேம் குமார், தனது அடுத்த படத்துக்காக நானியிடம் கதை கூறியதாகவும், உடனடியாக அந்த கதையில் நடிக்க நானி சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கதாநாயகியாக கன்னட மற்றும் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ருக்மிணி வசந்த் ஒப்பந்தமாக உள்ளதாகத் தெரிகிறது. இந்த புதிய படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இதர நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நானி மற்றும் உணர்வுப்பூர்வமான படைப்பாளி பிரேம் குமார் இணையும் இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதே எகிறத் தொடங்கியுள்ளது.
· @xpresscinema