ஆணவப் படுகொலைக்கு எதிரான குரலாக ஒலிக்கும் 'நெல்லை பாய்ஸ்': நவம்பர் 27 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!
சமூகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான அழுத்தமான விழிப்புணர்வுக் கதைக் களத்தோடு உருவாகியுள்ள 'நெல்லை பாய்ஸ்' திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குநர் கமல்.ஜி இயக்கத்தில் வி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் பிரவீன்குமார், ஹேமராஜ்குமார் உள்ளிட்ட பல இளம் திறமையாளர்கள் நடித்துள்ளனர். திருநெல்வேலியின் மண் வாசனை, எதார்த்தமான வாழ்க்கை முறை மற்றும் சமூகப் பிரச்னைகளை மையமாகக் கொண்ட எமோஷனல் ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. தென் மாவட்டங்களின் வாழ்வியலை உயிர்ப்போடு பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நீண்ட நாட்களாக திரையரங்கு வெளியீட்டிற்காகக் காத்திருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதால் படக்குழுவினர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ஆக்ஷனும் சமூக சிந்தனையும் கலந்த இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj