யூடியூப் டிரெண்டிங்கில் 24-வது இடத்தைப் பிடித்த 'பேசாமலே' பாடல்: சோனி மியூசிக் தகவல்
இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'பேசாமலே' சுயாதீன இசை ஆல்பம் பாடல் யூடியூப் டிரெண்டிங் பட்டியலில் 24-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளதாக சோனி மியூசிக் சவுத் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிரி சாண்டர் மற்றும் ஆரியா கயால் கூட்டணியில் உருவான இந்த மெல்லிசை பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. காதல் உணர்வுகளை மென்மையாகவும் எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தியுள்ள இந்த பாடல், சமூக வலைதள ரீல்ஸ்களிலும் ஷார்ட்ஸ்களிலும் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. பாடலின் வரிகளும் எளிமையான மெட்டும் கேட்பவர்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. தமிழ் சுயாதீன இசை உலகம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், சினிமா பாடல்களுக்கு இணையாக இந்த ஆல்பம் பாடல் டிரெண்டிங் வரிசையில் இடம்பிடித்திருப்பது அதன் குழுவினருக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
· Sony Music South