பிரசாந்த் நீல் வழங்கும் 418 திரைப்படம்: பாக்ஸ் ஆபீஸில் 2.25 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை!
கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் வழங்கும் புதிய ஹாரர் திரைப்படமான 418 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக நட்சத்திரங்கள் நடித்துள்ள போதிலும், முதல் வார இறுதியில் புக்மைஷோ மற்றும் டிஸ்ட்ரிக்ட் செயலிகள் வாயிலாக 2 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ளதாக பிரபல வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக அமானுஷ்ய ஹாரர் பாணியில் களமிறங்கி இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனர் கீர்த்தன் நாடகவுடா இப்படத்தை இயக்கியுள்ளதுடன், சுவாரசியமான கதையையும் எழுதியுள்ளார். இருள் சூழ்ந்த திகில் காட்சிகளும் ஆழமான பின்னணி இசையும் திரையரங்குகளில் ரசிகர்களை உறைய வைப்பதாகப் பாராட்டுகள் குவிகின்றன. புதிய முகங்களை வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஹாரர் திரைப்படத்திற்கு முதல் வாரத்திலேயே ரசிகர்கள் இத்தகைய பெரிய ஆதரவைத் தந்துள்ளது வர்த்தக வட்டாரங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar