பிரம்மாண்ட 'ராமாயணம்': கைகேயி மற்றும் மந்தரை கதாபாத்திர போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் இந்திய சினிமாவின் மாபெரும் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்திலிருந்து, இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் புதிய போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இப்படத்தின் இசை உரிமையைப் பெற்றுள்ள டி-சீரிஸ் நிறுவனம் இந்த கதாபாத்திர போஸ்டர்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் கைகேயி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை லாரா தத்தாவும், மந்தரை கதாபாத்திரத்தில் மூத்த குணச்சித்திர நடிகை ஷீபா சத்தாவும் நடித்துள்ளனர். இருவரின் தோற்றங்களும் பாரம்பரிய கம்பீரத்துடனும் மிரட்டலான முகபாவத்துடனும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களின் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன. ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் தேசிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்த முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· @xpresscinema