லாஸ் ஏஞ்சல்ஸ் பிரீமியரில் ரன்பீர் கபூர் நெகிழ்ச்சி: உலகமெங்கும் நவம்பர் 5 ரிலீஸாகும் 'ராமாயணா'!
பிரம்மாண்ட புராணத் திரைப்படமான 'ராமாயணா' படத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் பிரீமியர் காட்சியில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அன்பும் கடின உழைப்பும் கொண்டு செதுக்கப்பட்ட இந்த இதிகாசப் படைப்பு அனைத்து இதயங்களையும் வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராமராக நடித்துள்ள ரன்பீர் கபூர் அங்கு பேசுகையில், அன்பு, தைரியம், இரக்கம் மற்றும் தீமையை நன்மை வெல்லும் தருணங்கள் ஆகிய உலகளாவிய உணர்வுகளை இப்படம் பேசுகிறது என்று நெகிழ்ந்துள்ளார். நித்தேஷ் திவாரி இயக்கத்தில் யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் காட்சிகள் சர்வதேச தரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய அரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ராமாயணா' வரும் நவம்பர் 5 ஆம் தேதி பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ளது.
· Ursvamsishekar