பத்ரகாளி நாயகி ராணி சந்திராவின் 50வது நினைவு தினம்: திரையுலக வரலாற்றை நினைவுகூர்ந்த கயல் தேவராஜ்!
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத நாயகிகளில் ஒருவரான ராணி சந்திராவின் 50வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் ஒரு உருக்கமான சினிமா பகிர்வை வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகுமார் கதாநாயகனாக நடித்த 'பத்ரகாளி' படத்தில் நாயகியாக நடித்து பெரும் கவனம் பெற்ற ராணி சந்திராவின் வாழ்க்கை மற்றும் அந்த படத்தின் பின்னணியை அவர் நினைவுகூர்ந்துள்ளார். கடந்த 1976ஆம் ஆண்டு துபாயில் கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடும்பத்துடன் தாயகம் திரும்பியபோது, நிகழ்ந்த கோர விமான விபத்தில் ராணி சந்திரா, அவரது தாயார் மற்றும் மூன்று தங்கைகள் உள்பட 95 பேர் உயிரிழந்தனர். படப்பிடிப்பு பாதியில் நின்றதால், ராணி சந்திராவின் சாயலில் இருந்த துணை நடிகை புஷ்பாவை நடிக்க வைத்து இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் பத்ரகாளி படத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். பின்னர் அந்த புஷ்பாவின் மகளான மோகனா, கே.பாக்யராஜின் 'வீட்ல விசேஷங்க' திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான தகவலையும் தேவராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். அரை நூற்றாண்டு காலம் கடந்த பின்னரும் தமிழ் சினிமா ரசிகர்களின் நினைவில் நீங்காமல் வாழும் ராணி சந்திராவின் திரை அர்ப்பணிப்பை இன்றும் கோலிவுட் நெகிழ்ச்சியுடன் போற்றுகிறது.
· Actor Kayal Devaraj