வாரிசு படத்தின் முக்கிய திரையரங்கு உரிமத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்: பொங்கல் ரிலீஸ் உறுதி!
வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஆகிய முக்கிய மண்டலங்களின் திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2023 பொங்கல் திருநாளில் வெளியாகும் இப்படத்தின் கவுண்டவுன் முறைப்படி தொடங்கியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே குடும்பக் கதைகளத்தில் களம் கண்டுள்ளனர். தமன் இசையமைப்பில் உருவான பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருகின்றன. தமிழகத்தின் பெரும்பான்மையான மையங்களில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிடுவதால், வாரிசு படத்திற்கு மிகப்பெரிய அளவில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உறுதியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப ரசிகர்களை கவரும் நோக்கில் இத்திரைப்படம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
· Red Giant Movies