'கணம்' பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்கின் அடுத்த படம்: 'தாரா'வாக களமிறங்கும் ருக்மிணி வசந்த்!
'கணம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்கின் புதிய படத்தில், பிரபல நடிகை ருக்மிணி வசந்த் 'தாரா' என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இத்தகவலை தயாரிப்பு நிறுவனங்களான மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருணி சினி கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளன. சப்த சாகரதாச்சே எல்லோ திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ருக்மிணி வசந்த், தற்போது தமிழில் அடுத்தடுத்து முன்னணி படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இந்த புதிய திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள தாரா என்ற கதாபாத்திரம் துடிப்பான மற்றும் ஆழமான உணர்வுகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தேவ் ராம்நாத், விநாயக் வைத்தியநாதன் உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் இணைந்திருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து வெளியாகவுள்ள இந்த படத்தின் கூடுதல் அறிவிப்புகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.
· Only Kollywood