சசிகுமார், நரேன் இணையும் புதிய படம்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!
திரைத்துறையின் முன்னணி மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 22வது திரைப்படத்தின் பூஜை விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. ரவீந்திரன் மற்றும் சேத்தன் தியோல்கர் இணைந்து தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் நரேன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹரி சந்தோஷ் எழுத்து, இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அஞ்சலி நாயர், ஸ்வாசிகா, நந்திதா ஸ்வேதா, ஹரீஷ் பேரடி, பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு பணிகளையும், சான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளையும் கவனிக்கின்றனர். இயக்குநர் மற்றும் நடிகராக கிராமத்து கதைகளிலும் அழுத்தமான வேடங்களிலும் முத்திரை பதித்த சசிகுமாரும், கதைக்கு பலம் சேர்க்கும் நரேனும் ஒரே திரையில் இணைவது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜை நிகழ்வோடு படப்பிடிப்புப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
· Nikil Murukan