தெலுங்கில் களமிறங்கும் ஸ்டோன் பெஞ்சர்ஸ்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறார் வருண் தேஜ்!
தமிழில் பல தரமான மாற்று சினிமாக்களையும் கல்ட் ஹிட் படங்களையும் தயாரித்து பெயர் பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ் நிறுவனம், தற்போது தெலுங்கு திரையுலகில் தனது முதல் நேரடித் திரைப்படத்தை தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஸ்டோன் பெஞ்ச் தெலுங்கு 01' என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் ராஜேந்திர பாலா எழுதி இயக்குகிறார். இத்திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் தலைப்பு ப்ரோமோவை முன்னணி தெலுங்கு நடிகர் மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நாளை மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து தயாரித்து வரும் ஸ்டோன் பெஞ்சர்ஸ், தெலுங்கிலும் அதே போன்ற ஒரு வலுவான கதைக்களத்துடன் களமிறங்குவதால், இந்த புதிய முயற்சி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன.
· Ursvamsishekar