மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கும் முதல் பாகத்திற்கும் என்ன தொடர்பு? சுந்தர் சி கொடுத்த நேரடி விளக்கம்
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் வேடத்தில் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. முதல் பாகத்திற்கும் இந்த இரண்டாம் பாகத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கு இயக்குனர் சுந்தர் சி தற்போது வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார். தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தன்னை அணுகிய போது, தன்னிடம் ஏற்கனவே மூக்குத்தி அம்மன் சாயலில் ஒரு கதை இருந்ததாக சுந்தர் சி குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் முதல் பாகத்தின் கதைக்கும் இதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்பதை அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கும் பொதுவாக நான்கு விஷயங்கள் மட்டுமே உள்ளன: ஒன்று மூக்குத்தி அம்மன் என்ற தலைப்பு, இரண்டாவது தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், மூன்றாவது நாயகி நயன்தாரா, நான்காவதாக முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் ஊர்வசி மட்டுமே என்று அவர் விளக்கமளித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த முதல் பாகம் நகைச்சுவையும் சமூகக் கருத்தும் கலந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சுந்தர் சியின் பிரம்மாண்ட வணிகப் பாணியில் முற்றிலும் புதிய களத்தில் உருவாகி வரும் இந்த இரண்டாம் பாகம், ரசிகர்களுக்கு புதுவிதமான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
· @_movietamil