கேரளாவில் சூர்யாவின் கெத்து: 'சீன்' படத்திற்கு இதுவரை இல்லாத பிரம்மாண்ட ரிலீஸ்!
நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சீன்' திரைப்படம், கேரளாவில் இதுவரை எந்த ஒரு சூர்யா படமும் காணாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான திரையரங்கு வெளியீட்டைப் பெறவுள்ளதாக மலையாள சினிமா விமர்சன பக்கமான 'MalayalamReview' எக்ஸ் தளத்தில் தகவல் பகிர்ந்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் சூர்யாவுக்கு ஆரம்ப காலம் முதலே பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு என்ற நிலையில், இந்த அறிவிப்பு கேரள சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'ரோமாஞ்சம்', 'ஆவேசம்' போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைக் கொடுத்த ஜித்து மாதவன் இப்படத்தை இயக்குவதுதான் இந்த அசுர எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. சூர்யாவுடன் நஸ்ரியா, நஸ்லன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக துடிப்பான நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்த புதிய பாணியில் களம் இறங்கியுள்ளார். ஜித்து மாதவனின் முந்தைய படங்கள் கேரள திரையரங்குகளில் கொண்டாட்ட அலைகளை உருவாக்கியதால், சூர்யாவுடனான இந்தக் கூட்டணி அங்கே மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கேரளாவின் முக்கிய நகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள் வரை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான திரைகளில் 'சீன்' படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ள இப்படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய உச்சங்களை எட்டும் என்பதில் சந்தேகமில்லை என்று கோலிவுட் மற்றும் மல்லுவுட் சினிமா ஆர்வலர்கள் உற்சாகத்துடன் கணித்து வருகின்றனர்.
· MalayalamReview