திரைக்கதை எழுத்தாளர்களுக்காக உதயமாகும் 'ஸ்வான் அகாடமி': லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
திரைப்பட கதாசிரியர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களின் உரிமைகளையும் முன்னேற்றத்தையும் பாதுகாக்கும் நோக்கில் 'ஸ்வான் அகாடமி' என்ற புதிய அமைப்பு பிரம்மாண்டமாக தொடங்கப்படவுள்ளது. தயாரிப்பாளர் பஜார் அமைப்புடன் இணைந்து நடத்தப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விழாவில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செப்டம்பர் 27 அன்று நடைபெறும் இந்த நிகழ்வில், திரைக்கதை எழுத்து மற்றும் படைப்புலக நுணுக்கங்கள் குறித்த சிறப்புப் பயிலரங்குகள் இடம்பெறவுள்ளன. பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை மற்றும் அனுராஜ் மனோகர் ஆகியோர் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் சிறப்பு அமர்வுகளை நடத்தவுள்ளனர். திரையுலகில் கதாசிரியர்களின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், புதிய திறமையாளர்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ள இந்த அகாடமியில் முதல் கட்டமாக 100 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இயக்குனர் சேரன் உள்ளிட்ட பல முக்கிய திரையுலகப் பிரபலங்களும் இந்த முயற்சிக்கு தங்களது பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
· Nikil Murukan