கில்லி ரீ-ரிலீஸ் மெகா ஹிட்: இயக்குநர் தரணிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த தளபதி விஜய்
திரையரங்குகளில் மறுவெளியீட்டிலும் வசூல் மழை பொழிந்து சாதனை படைத்த கில்லி திரைப்படத்தின் இயக்குநர் தரணியை நேரில் அழைத்து தளபதி விஜய் பாராட்டியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தை மூத்த பத்திரிகையாளர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். 2004-ல் வெளியாகி தமிழ் சினிமாவில் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்த கில்லி திரைப்படம், 20 ஆண்டுகள் கழித்து நவீன 4K தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியானது. முதல் வெளியீட்டைப் போலவே தியேட்டர்களில் திருவிழா போல கூடி ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர். வசூலிலும் பல கோடி ரூபாய்களைக் குவித்து மறுவெளியீட்டு வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணிக்கு பொன்னாடை போர்த்தி தளபதி விஜய் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். விஜய் மற்றும் தரணி இணைந்து நிற்கும் இந்த அழகான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களால் உற்சாகத்துடன் பகிரப்பட்டு வருகிறது.
· Actor Kayal Devaraj