கலையரசன், ஆனந்தி கூட்டணியில் உருவாகியுள்ள 'டைட்டானிக்' திரைப்படம் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் ரிலீஸ்!
பிரபல தயாரிப்பாளர் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டைட்டானிக்' திரைப்படம் வரும் நவம்பர் 13 அன்று திரைக்கு வரவுள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஜானகிராமன் இயக்கியுள்ளார். 'மெட்ராஸ்' புகழ் கலையரசன் மற்றும் 'கயல்' ஆனந்தி முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், மதுமிதா உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 'கொஞ்சம் காதல், கொஞ்சம் ஃபீலிங்ஸ், அன்லிமிடெட் ஃபன்' என்ற டேக்லைனுடன் ஒரு முழுநீள ரொமாண்டிக் காமெடி விருந்தாக இப்படம் உருவாகியுள்ளது. பாலுவின் ஒளிப்பதிவும், அஸ்வின் விநாயாகமூர்த்தியின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. ஏற்கனவே அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற தரமான படங்களைத் தந்த சி.வி. குமார் தயாரிப்பு என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்த 'டைட்டானிக்', ரசிகர்களுக்கு வயிறு குலுங்க சிரிக்கும் அனுபவத்தைத் தரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
· Nikil Murukan