தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து: சேரன் முன்னிலையில் ஆயுட்கால உறுப்பினரானார்
புகழ்பெற்ற கவிஞரும் பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்து, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் (SWAN) அதிகாரப்பூர்வமாக ஆயுட்கால உறுப்பினராக இணைந்துள்ளார். இது தொடர்பாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சங்கத்தின் நிர்வாகிகள் கவிஞரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற விபரங்கள் பகிரப்பட்டுள்ளன. சங்கத்தின் தலைவரான இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன், துணைத்தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் இயக்குநர் கேபிபி நவீன் ஆகியோர் கவிப்பேரரசு வைரமுத்துவை நேரில் சந்தித்தனர். அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று, சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் சந்தா செலுத்தி அவர் ஆயுட்கால உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாசிரியர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் வசனகர்த்தாக்களின் நலன்களைப் பாதுகாக்கும் இந்த அமைப்பில் வைரமுத்து இணைந்திருப்பது திரைத்துறை எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
· Nikil Murukan