எம்மி விருது வழங்கும் முதல் இந்தியர் விஜய் சேதுபதியா: நடிகை பிரேர்னா வான்வரி எழுப்பியுள்ள புதிய சர்ச்சை!
நியூயார்க்கில் வரும் நவம்பர் 23 அன்று நடைபெறவுள்ள 54வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருதுகளை வழங்கும் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பங்கேற்கிறார். இந்நிலையில் சர்வதேச எம்மி விருதுகளை வழங்கும் முதல் இந்தியர் விஜய் சேதுபதி என்ற தகவலுக்கு எதிராக நடிகை பிரேர்னா வான்வரி விளக்கம் அளித்துள்ளதாக சினிமா எக்ஸ்பிரஸ் இணையதளம் எக்ஸ் தளத்தில் விரிவான செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டே சர்வதேச எம்மி விருதுகள் மேடையில் தான் விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டதாக நடிகை பிரேர்னா வான்வரி சுட்டிக்காட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் சர்வதேச பெருமையை மனதார பாராட்டும் அதே வேளையில், வரலாற்றை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர்தான் முதல் இந்தியர் என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் தென்னிந்திய திரைத்துறையிலிருந்து இந்த சர்வதேச எம்மி விருதுகள் மேடையில் விருதை வழங்கும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெறுகிறார். இந்த புதிய தகவல் தற்போது சினிமா வட்டாரங்களிலும் இணைய ரசிகர்களிடையேயும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
· @xpresscinema