விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்' ரிலீஸ் தள்ளிவைப்பு: சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜு இணைந்து நடிக்கும் 'இரண்டு வானம்' திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் போஸ்டர் பாய் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம் குறித்த தகவலை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' போன்ற படங்களை இயக்கிய ராம் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் மற்றும் ராம் குமார் இணையும் மூன்றாவது கூட்டணி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் தொடக்கம் முதலே நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் 'பிரேமலு' புகழ் மமிதா பைஜு இதில் கதாநாயகியாக இணைந்திருப்பது இளசுகள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முழுமையாக முடித்து சரியான திட்டமிடலுடன் படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திரையரங்குகளில் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் இப்பணிகள் நிறைவடைந்ததும், புதிய வெளியீட்டுத் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர் மற்றும் அடுத்தகட்ட பாடல்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Nikil Murukan