வெள்ளித்திரையில் விஜய் சித்து: தயங்காரம் படத் தலைப்பை அறிவித்தது வேல்ஸ் பிலிம்ஸ்!
சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனங்களைக் கவர்ந்த பிரபல பொழுதுபோக்குக் கலைஞர் வி.ஜே. சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. 'தயங்காரம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பு வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சக்கைபோடு போட்டு வருகிறது. தலைப்பு எப்படி இருக்கு, பயங்கரமா இல்ல தயங்காரமா என்று நகைச்சுவையாகக் கேட்டு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு வீடியோவில் சித்துவின் வழக்கமான நகைச்சுவைப் பாணி அருமையாகப் பிரதிபலிக்கிறது. ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் தயாராகும் இந்தத் திரைப்படம், குடும்பத்துடன் வந்து திரையரங்குகளில் வயிறு குலுங்கச் சிரித்து ரசிக்கும் கலகலப்பான பொழுதுபோக்குக் கதையாக உருவாக்கப்படுகிறது. இணையத் திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கும் வி.ஜே. சித்து, தனது கலகலப்பான நகைச்சுவை மூலம் ரசிகர்களைக் கவர முழு மூச்சாகக் களம் இறங்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அடுத்தகட்ட தகவல்களும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்களும் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
· VelsFilmIntl