ராமாயணா படத்தின் கர்நாடக ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய யாஷ்: மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் அதிரடி!
இந்திய திரையுலகமே வியந்து நோக்கும் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் குறித்து ஒரு அதிரடியான வர்த்தக அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராவணனாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் இணை தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ள ராக்கிங் ஸ்டார் யாஷ், தற்போது கர்நாடக விநியோகத்திலும் முக்கிய முடிவை எடுத்துள்ளார். திரைப்பட மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் வெளியிட்டுள்ள தகவலின்படி, 'ராமாயணா' படத்தின் ஒட்டுமொத்த கர்நாடக மாநில திரையரங்கு வெளியீட்டு உரிமையை யாஷின் சொந்த நிறுவனமான மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் முறைப்படி பெற்றுள்ளது. கேஜிஎஃப் படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்த யாஷின் சொந்த பேனர் இப்படத்தை விநியோகம் செய்வது வர்த்தக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வரும் இப்படம் பல பாகங்களாக உருவாகி வருகிறது. அதிநவீன தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றும் இப்படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே செல்லும் வேளையில், யாஷின் இந்த விநியோக அறிவிப்பு கன்னட மற்றும் தென்னிந்திய சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
· Ursvamsishekar